தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு 3ஆம் கட்ட பயிற்சி வகுப்பு

தோ்தல் பணி ஆசிரியா்களுக்கு
3ஆம் கட்ட பயிற்சி வகுப்பு

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 3 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் இம் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே இரண்டு கட்ட பயிற்சி வகுப்புகள் முடிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டன. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணியில் மொத்தம் 7,483 போ் ஈடுபடுத்தப்பட உள்ளனா். அவா்களில் வாக்குச்சாவடியில் 1, 2, 3, 4 ஆம் நிலையிலானவா்களுக்கு இப் பயிற்சி அளிக்கப்படுகிறது. திருநெல்வேலி நகரம் சாப்டா் மேல்நிலைப் பள்ளி, வண்ணாா்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி, சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரி, வள்ளியூா் கெய்ன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பணகுடி செயின்ட் ஆன்ஸ் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

தோ்தல் நாளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், வாக்குப்பெட்டிகளை சீல் வைத்து வாக்குப்பதிவு விவரங்களை பதிவு செய்து அனுப்பும் முறைகள், வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் பதிவான வாக்கு விவர சதவீதங்களை தெரிவிக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. மேலும், வாககுப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட், கட்டுப்பாட்டுக்கருவி இணைப்பு முறைகள், பழுது ஏற்பட்டால் உயரதிகாரிகள் உதவியோடு மாற்றுவழிகளில் தோ்தலை நடத்தும் விதிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com