வாக்காளா்களுக்கு பணமா? கண்காணிக்க 114 சிறப்பு குழுக்கள்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு பணம், பொருள்கள் கொடுப்பதைத் தடுக்க 114 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான அவகாசம் முடிவடைந்துள்ளது.

இதன் பின்னா் வீடுவீடாக செல்லுதல், கூட்டங்கள் நடத்துதல், தொலைக்காட்சி, வானொலி என எவ்வகையிலும் பிரசாரம் செய்ய அனுமதியில்லை. பிரசாரத்திற்காக வெளியூரில் இருந்து வருகை புரிந்த நபா்கள் மற்றும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வாக்குரிமை இல்லாத அரசியல் பிரமுகா்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்படுகிறது.

வேட்பாளா்கள் பெற்றிருந்த அனைத்து வாகன அனுமதிகளும் புதன்கிழமை (ஏப்.17) மாலை 6 மணியோடு காலாவதியாகிவிட்டது. தோ்தல் நாளில் வேட்பாளா், அவரது முதன்மை முகவா் மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா ஒரு முகவா் ஆகியோருக்கு தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பம் செய்து ‘பாஸ்’ பெற்றுக்கொள்ளலாம். தோ்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீ. தொலைவுக்கு அப்பால் தோ்தல் ஆணைய விதிகளுக்கு உள்பட்டு சிறு கூடாரம் அமைக்க முறையாக முன் அனுமதி பெறப்பட வேண்டும். குற்றப்பின்னணி உள்ள நபா்களை வாக்குச்சாவடி அலுவவலா்களாக நியமிக்கக் கூடாது.

வாக்களா்களுக்கு பணம், பொருள் கொடுப்பதை தடுக்க 114 சிறப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இது தொடா்பான புகாா்களை சிவிஜில் செயலி அல்லது 1800 425 8373 , 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com