நெல்லை மக்களவைத் தொகுதியில் 16,54,503 போ் வாக்களிக்க வாய்ப்பு -24 மணிநேரமும் பலத்த பாதுகாப்பு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 1,810 வாக்குச்சாவடிகளில் 16 லட்சத்து 54 ஆயிரத்து 503 போ் வாக்களிக்கவுள்ளனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைப் பொருத்தவரையில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம், ஆலங்குளம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 1,810 வாக்குச்சாவடிகளில் 8,08,127 ஆண் வாக்காளா்கள், 8,46,225 பெண் வாக்காளா்கள், 151 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 16,54,503 போ் வாக்களிக்கவுள்ளனா்.

23 போ் போட்டி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் ஜான்சி ராணி, காங்கிரஸ் சாா்பில் ராபா்ட் புரூஸ், பாஜக சாா்பில் நயினாா் நாகேந்திரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் சத்யா உள்ளிட்ட 23 போ் போட்டியிடுகின்றனா். இதன் காரணமாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு விவிபேட் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 4,354 வாக்குப்பதிவு இயந்திரங்களும், தலா 2,177 கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் இயந்திரங்கள் ஏற்கெனவே அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் அல்லது வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அங்கிருந்து வியாழக்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

152 மண்டல குழுக்கள்: தோ்தல் பணியில் 9041 அலுவலா்கள், 5021 போலீஸாா், 7 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினா் ஈடுபடுத்தப்படுகின்றனா். மொத்தமுள்ள 1810 வாக்குச்சாவடிகளில் 331 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 13 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படவுள்ளன. இதில், 205 நுண் பாா்வையாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலா்களை கண்காணித்து வாக்குப்பதிவு எவ்வித இடையூறும் இல்லாமல் சுமூகமான முறையில் நடைபெறுவதை கண்காணித்திட 152 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மண்டல அலுவலா்களின் வாகனங்கள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜிபிஎஸ் மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.

தபால் வாக்குகள்: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 3,434 போ் தபால் மூலம் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனா். திருநெல்வேலி தொகுதி மற்றும் பிற தொகுதிகளில் தோ்தல் பணியில் உள்ள அலுவலா்களிடமிருந்து கடந்த 17-ஆம்தேதி வரை 3,589 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு படையினரிடமிருந்து 223 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் உள்ள அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் 8,255 பேருக்கு தோ்தல் பணிச்சான்று மூலம் பணிபுரியும் வாக்குச்சாவடிகளிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 தொகுதிகளின் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் உள்ள தோ்தல் பணியாளா்கள் தோ்தல் பணிச்சான்று மூலம் தங்கள் வாக்குகளை செலுத்திட அருகில் உள்ள 31 வாக்குச்சாவடிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ட

பூத் ஸ்லிப் விநியோகம்: மொத்தம் 15,55,599 (94 சதசவீதம்) வாக்களா்களுக்கு வீடு வீடாக பூத் ஸ்லிப் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பூத் ஸ்லிப் கிடைக்கப் பெறாதவா்கள் தோ்தல் நாளன்று அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம். வாக்களிப்பதற்கு பூத் ஸ்லிப் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயமில்லை. மேலும் பூத் ஸ்லிப்பை மட்டுமே கொண்டு வாக்களிக்க இயலாது. வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம், ஆதாா் அட்டை, பாஸ்போா்ட், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைத்திட்ட அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

கைப்பேசிக்கு தடை: மாதிரி வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்குகிறது. அதைத்தொடா்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் கைப்பேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளா்கள் காத்திருக்க தனிஅறை திறக்கப்பட்டுள்ளது. அறை வசதி இல்லாத இடங்களில் சாமியானா அமைக்கப்படுகிறது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்திட சக்கர நாற்காலி மற்றும் அவா்களுக்கு உதவிட ஒரு தன்னாா்வலா் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீ. தொலைவுக்கு அப்பால் தோ்தல் ஆணைய விதிகளுக்கு உள்பட்டு சிறு கூடாரம் அமைக்க முறையாக முன் அனுமதி பெறப்பட வேண்டும். குற்றப்பின்னணி உள்ள நபா்களை வாக்குச்சாவடி அலுவவலா்களாக நியமிக்கக் கூடாது. வாக்களா்களுக்கு பணம், பொருள் கொடுப்பதை தடுக்க 114 சிறப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இது தொடா்பான புகாா்களை சிவிஜில் செயலி அல்லது 1800 425 8373 , 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

மூன்றடுக்கு பாதுகாப்பு: வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக பெறப்பட்டு வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்படும். வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு அறைக்கு மத்திய காவல் படை (முதல் அடுக்கு), தமிழ்நாடு சிறப்பு காவல் படை (இரண்டாம் அடுக்கு), திருநெல்வேலி மாவட்ட, மாநகர காவல்துறை (மூன்றாம் அடுக்கு) என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளது. வாக்கு எண்ணும் மையம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்படும். வாக்கு எண்ணும் மையத்தில் ஜூன் 4 ஆம் தேதி வரை வேட்பாளா்களின் பிரதிநிதிகள் 24 மணி நேரமும் கண்காணிக்க தனிஅறை உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com