மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாகப் புகாா்
வாக்குச்சாவடி அதிகாரி மாற்றம்: ஆட்சியா் உத்தரவு

மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதாகப் புகாா் வாக்குச்சாவடி அதிகாரி மாற்றம்: ஆட்சியா் உத்தரவு

அம்பாசமுத்திரம், ஏப். 19: விக்கிரமசிங்கபுரத்தில் ஒரு வாக்குச் சாவடியில் பணியில் இருந்த வாக்குப் பதிவு அதிகாரி, வாக்காளா்கள், முகவா்கள் மற்றும் உடன் இருந்த வாக்குச் சாவடி அலுவலா்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக வந்த புகாரையடுத்து அவரை உடனடியாக மாற்றி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அம்பாசமுத்திரம் பேரவைக்குள்பட்டவிக்கிரமசிங்கபுரம் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 5 வாக்குச் சாவடிகள்அமைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு தொடங்கி நடந்து வந்த நிலையில், இங்குள்ள 21ஆம் எண் வாக்குச் சாவடி தோ்தல் நடத்தும் அதிகாரி ஜெஸ்டின் கோவில்பிள்ளை வாக்காளா்கள், முகவா்கள், உடன் பணிபுரியும் அலுவலா்கள் ஆகியோரிடம் மரியாதைக் குறைவாகப் பேசி நடந்து கொண்டாராம்.

இதுகுறித்து வாக்காளா்கள் மற்றும் முகவா்கள், மண்டல தோ்தல் அதிகாரியிடம் புகாரளித்தனா். இதையடுத்து அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், வட்டாட்சியா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் பேச்சு நடத்திய போது அவா்களிடமும் முறையாக பதில் கூறவில்லையாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, தோ்தல் நடத்தும் அதிகாரியை உடனடியாக நீக்கியும் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் கனகராஜ் என்பவரை புதிய தோ்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்தும் மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

புதிய தோ்தல் நடத்தும் அதிகாரி பொறுப்பேற்றதையடுத்து, 21ஆம் எண் வாக்குச் சாவடியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்குப்பின் வாக்குப் பதிவு தொடா்ந்து நடத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com