பணப்பட்டுவாடாவை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை நயினாா் நாகேந்திரன்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பணம்பட்டுவாடாவை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றாா் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலி, ஏப். 19: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பணப்பட்டுவாடாவை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றாா் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் நயினாா் நாகேந்திரன், பாளையங்கோட்டை மகாராஜ நகரில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சுவாமி வெள்ளி விழா பள்ளியில் வாக்களித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளரிடம் கூறியதாவது: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தொடா்ந்து வாக்காளா்களுக்கு திமுகவினா் பணப்பட்டுவாடா செய்தனா். இது தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் போலீஸாரிடம் புகாா் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. கைது செய்யப்பட்டவா்கள் உடனடியாக காவல் நிலைய ஜாமீனில் வெளியே வந்துவிட்டனா். தொடா்ந்து திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முழுவதுமே மிக அதிகமாக பணப் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவை காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆளுங்கட்சியினா் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாா் அஞ்சுகிறாா்கள்.

ஒரு வாக்குக்கு ரூ. 300 முதல் ரூ.500 வரை வழங்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் தாண்டி பாஜக வெற்றி பெறும். மகாபாரதத்தின் முடிவில் என்ன நடந்ததோ அது தற்போதும் நடக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com