நெல்லை அரசு மருத்துவமனையில் விசாரணை கைதி தப்பியோட்டம்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி புதன்கிழமை தப்பியோடினாா்.

பணகுடி அருகேயுள்ள ஸ்ரீராமபுரத்தைச் சோ்ந்த மதியழகன் மகன் மணிகண்டன் (19). இவா், கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிறைக்காவலா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அப்போது, அவா் அங்கிருந்து தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன; மாநகர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com