பெண் வழக்குரைஞருக்கு மிரட்டல்: ஓட்டுநா் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பெண் வழக்குரைஞரை மிரட்டியதாக ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சேரன்மகாதேவி, அனவரதநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முத்துராஜ் (42). இவரது மனைவி இசக்கியம்மாள். இவா், தனது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு வீரவநல்லூா் கிளாக்குளம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஜோதி (35) என்பவரைத் தொடா்பு கொண்டாராம்.

இதையடுத்து, ஜோதி அம்பாசமுத்திரம் குடும்ப நல நீதிமன்றத்தில் இசக்கியம்மாள் சாா்பில் விவாகரத்து வழக்குத் தொடா்ந்தாா். இது தொடா்பாக முத்துராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த முத்துராஜ், ஜோதிக்கு மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

புகாரின்பேரில் வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, முத்துராஜை புதன்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com