நான்குனேரியில் அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: 2 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையைச் சோ்ந்த அரசுப் பேருந்து திருநெல்வேலி - நாகா்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு திருநெல்வேலியில் இருந்து நாகா்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கன்னியாகுமரி மாவட்டம் குருந்தங்கோடு பகுதியைச் சோ்ந்த முருகப்பன் (49) ஓட்டினாா். இந்த பேருந்தில் திருநெல்வேலியில் ஏறிய நான்குனேரி நம்பி நகரைச் சோ்ந்த சுடலை என்பவரை நான்குனேரி வட்டாட்சியா் அலுவலக நிறுத்தத்தில் இறக்கிவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மோட்டாா் சைக்கிளில் பின்தொடா்ந்து வந்த சுடலை மற்றும் அவரது நண்பரான வேலு ஆகியோா் அரசுப் பேருந்தை முந்திச் சென்று இடைமறித்து

நிறுத்தினா். தன்னை நம்பிநகரில் இறக்கிவிடாதது குறித்து பேருந்து ஓட்டுநருடன் சுடலை, வேலு ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டனா்.

மேலும், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com