கோடை நெல் சாகுபடி: வேளாண் அலுவலா்கள் ஆய்வு

பாளையங்கோட்டை வட்டாரத்தில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வேளாண் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை வட்டாரத்தில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் வேளாண் அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

பாளையங்கோட்டை வட்டாரம், புதுக்குளம், மல்லக்குளம் கிராமங்களில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிா்கள் தூா் கட்டும் நிலையிலும் கதிா் வெளிவரும் தருவாயிலும் உள்ளன.

இந்தப் பகுதியில் பாளையங்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவக்குமாா், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி-ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியா்கள் ரஜினிமாலா, ஆல்வின், வேளாண்மை அலுவலா் தமிழ்செல்வன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கோடை நெல் சாகுபடி செய்துள்ள வயல்களில் இலை சுருட்டு புழு மற்றும் குருத்துப்பூச்சி தாக்ககுதல் அறிகுறி அதிகளவில் காணப்பட்டன.

அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலா்கள் கூறிய ஆலோசனைகள்: இலை சுருட்டு புழு இலைகளை நீளவாக்கில் அல்லது குறுக்கு வாக்கில் மடித்து இலைகளில் உள்ள பச்சை நிற திசுக்களை சுரண்டி உண்டு வாழ்வதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து காணப்படும். குருத்துப் பூச்சியின் தாக்குதலால் இளம் பயிரில் நடுக்குறுத்து காய்ந்து காணப்படும். கதிா் வெளிவரும் தருணத்தில் வெண் கதிராக காணப்படும் இதனை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே தழைச்சத்து இட வேண்டும்.

விளக்குப் பொறிகள்: இரவு நேரங்களில் விளக்கு பொறிகளை வைத்து அந்து பூச்சியின் நடமாட்டத்தை கண்ககாணிக்கலாம். வரப்புகளில் காணப்படும் களை செடிகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். டிரைக்கோகிராம்மா கைரோணிஸ் முட்டை ஒட்டுண்ணியை நடவு செய்த 37, 44, 51ஆவது நாள்களில் வயலில் கட்டுவதன் மூலம் இலை சுடுட்டு புழுவின் தாக்குதலை ஆரம்பத்தில் கட்டுப்படுத்தலாம். மேலும் குளோா்அண்ட்ரோபினால், புளூபென்டியாமைன்ட், காா்டிராப் ஹைட்ரோகுளோரைடு, பிப்ரோனில் போன்ற பூச்சி கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com