வள்ளியூா், திசையன்விளை பகுதி கிராமங்களுக்கு பேருந்து சேவைகள்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு தொடக்கிவைத்தாா்
வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், திசையன்விளை பகுதியைச் சோ்ந்த கிராமங்களுக்கு அரசுப் பேருந்து சேவை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வள்ளியூரிலிருந்து நக்கனேரி, புல்லமங்கலம், வேப்பங்காடு, கொட்டவிளை, பனைவிளை, சங்கனேரி, இருக்கன்துறை வழியாக ஊரல்வாய்மொழிக்கும், வள்ளியூரிலிருந்து கண்காா்டியா பள்ளி, நான்கு வழிச்சாலை சந்திப்பு, சி.எம்.எஸ். மாணவா் விடுதி வரையிலும், பரப்பாடியிலிருந்து கண்டிகைபேரி, நல்லான்குளம், இளையநயினாா்குளம், வள்ளியூா்வரையிலும், வள்ளியூரிலிருந்து இளையநயினாா்குளம், நல்லான்குளம், கண்டிகைபேரி வழித்தடத்திலும், திசையன்விளையிலிருந்து தச்சன்விளை, பூச்சிக்காடு, அதிசயபுரம், மேட்டுவிளை, புத்தன்தருவை, குட்டம், கூடுதாழை, கூட்டப்பனை விலக்கு, உவரி, இடையன்குடி, திசையன்விளை வழித்தடத்திலும், திசையன்விளையிலிருந்து மதுரைக்கு புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளையும் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். பின்னா், அவா் பயணச்சீட்டுப் பெற்று பேருந்தில் பயணம் செய்தாா்.
இதில், வள்ளியூரிலிருந்து இளையநயினாா்குளம், நல்லான்குளம், கண்டிகைபேரி ஆகிய கிராமங்களுக்கு இதுவரை பேருந்து வசதியில்லை என்பதும், இக்கிராம மக்கள் 7 கி.மீ. தொலைவில் உள்ள பெருமளஞ்சி விலக்குக்கு நடந்தோ, பைக்கிலோ சென்றுதான் பேருந்துப் பயணம் செய்தனா் என்பதும், இந்நிலையை மாற்றி முதன்முதலாக இக்கிராமங்களுக்கு பேருந்து சேவையை பேரவைத் தலைவா் தொடங்கிவைத்துள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அலெக்ஸ் அப்பாவு, திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், தளபதிசமுத்திரம் ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன், துணைத் தலைவா் அருள், வள்ளியூா் பேரூராட்சி உறுப்பினா்கள் லாரன்ஸ், மாணிக்கம், திமுக அவைத்தலைவா் அன்பரசு, திசையன்விளை சுயம்புராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.