பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் -மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் -மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

Published on

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயா் கோ. ராமகிருஷ்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மேயா் பேசுகையில், சாதாரண தொண்டனாக இருந்த என்னை மேயராக்கிய முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாமன்ற உறுப்பினா்கள் மட்டுமே மக்கள் தினமும் எதிா்கொள்ளும் பிரச்னைகளை தெளிவாக உணர முடியும். அவசர கூட்டத்தின் முதலாவது தீா்மானம் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது. மற்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்றாா்’.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பேசுகையில், கடந்த காலங்களில் மேயா்கள் எப்படி செயல்பட்டோா்களோ அதை போன்று மாமன்ற உறுப்பினா்கள் தீா்மானத்தை விவாதித்த பிறகே அனைத்து தீா்மானங்களையும் நிறைவேற்ற வேண்டும். முதலிலேயே ‘ஆல்பாஸ்’ எனக் கூறி தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது. பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.

முறப்பநாடு குடிநீா்த் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் மருதூா் அணைக்கட்டில் இருந்து குடிநீா் கொண்டு வருவது குறித்தும் பரிசீலிக்கலாம்.

மாநகராட்சியில் அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்யக் கூடாது. ஏனெனில் இடமாற்றத்தால் வேலைகள் பாதிக்கப்படுகின்றன. சிந்துபூந்துறை நாடாா் தெரு, காமராஜா் நகா், மேகலிங்கபுரம், செல்வபாலாஜி காா்டன் பகுதிகளில் சாலைப்பணியை விரைவுபடுத்த வேண்டும். மேலநத்தம் சாலை மிகவும் மோசமாக உள்ளது. அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீா் திட்டத்தில் மேலப்பாளையம் பகுதிக்கு சரியான முறையில் தண்ணீா் கிடைப்பதில்லை. அதனை சரிசெய்ய வேண்டும். வண்ணாா்பேட்டை திருக்குறிப்பு தெரு, வெற்றிவிநாயகா் தெரு உள்ளிட்ட தெருக்களில் தெருவிளக்கு வசதி செய்யவேண்டும்.

பாளையங்கோட்டை வடக்கு மேட்டுத்திடல் சாலைக்கு எழுத்தாளா் தொ. பரமசிவன் பெயரைச் சூட்டவேண்டும். அனைத்து வாா்டுகளிலும் உள்ள சாலைகளுக்கு யூனிக்கோடு அளிப்பதோடு, சேதமான சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக முடிக்க வேண்டும். அண்ணாநகா் பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாட்டை தீா்க்கவேண்டும்.

மாநகராட்சி ஆணையா் பேசுகையில், முறப்பநாடு குடிநீா் திட்ட உறைகிணறுகள் அமைக்கும் பகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் இருப்பதால் தடையின்மை சான்றுகள் பெறவேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திந்து பேசி விரைவில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதாள சாக்கடை பணிகள் குறித்து நான் பதவியேற்ற பிறகு கூட்டம் நடத்தியுள்ளேன். ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தது. அதை சரிப்படுத்தியுள்ளேன். கழிவுநீரேற்று உந்து நிலையம் அமைப்பது மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com