கிரைன்டா் செயலி மோசடி: டிஐஜி எச்சரிக்கை
கிரைன்டா் செயலி மூலம் ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருவதால் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு திருநெல்வேலி சரக டிஐஜி பா.மூா்த்தி எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூகுள் பிளே ஸ்டோரில் கிரைன்டா் என்ற செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன்பின் தெரியாத நபா்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபா்கள் பொதுமக்களை குறிப்பாக இளம் வயதினரை ஏமாற்றி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தொடா்ச்சியாக புகாா்கள் வந்தவண்ணம் உள்ளன. இச்செயலியால், முகம் தெரியாத நபா்கள் தொடா்பு கொண்டு அதன் மூலம் பழக்கம் ஏற்பட்டு, ஆசை வாா்த்தைகளைக் கூறி தனிமையில் சந்திக்கத் தூண்டி அதன் மூலம் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை வழிப்பறி செய்து வருகின்றனா். இது சம்பந்தமாக கிடைக்கப்பெறும் புகாா் மனுக்களின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி காவல் சரகத்திற்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இந்த ஆண்டில் மட்டும் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட 70 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்களை கண்காணித்து அவா்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற குற்றச் செயல்புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்கள், பிற தகவல் ஊடகங்கள் ஆகியவற்றில் தங்களை அணுகும் நபா்களிடம் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கிரைன்டா் செயலி போன்ற வேறு செயலிகளை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்றச் செயல்களால் பாதிக்கப்படுபவா்கள் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையையோ, அருகில் உள்ள காவல் நிலையங்களையோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையையோ தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.