மாவட்ட வேலைவாய்ப்பு மைய புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய புதிய ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கு சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
மாவட்ட வேலைவாய்ப்பு மைய  புதிய கட்டடத்துக்கு  அடிக்கல்

 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் ஆகிய அலுவலகங்களுக்கு புதிய ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கு சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் ஆகிய அலுவலகங்களுக்கு புதிய ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிக்கான பூஜைகளை தொடங்கி வைத்தாா். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி மற்றும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் ஆகிய இரண்டு அலுவலகங்களும் சொந்த கட்டடம் இல்லாத நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வளாகத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டடத்தில் 2022 ஆண்டு வரை இயங்கி வந்தது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இக்கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு இவ்விரு அலுவலகங்களும் தற்போது பெருமாள்புரத்திலுள்ள வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பின்படி, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் ஆகிய இரண்டு அலுவலகங்களுக்கும் புதிய ஒருங்கிணைந்த கட்டடம் கட்டுவதற்கான அரசாணை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையால் வெளியிடப்பட்டது.இந்த அரசாணையின்படி ரூ.3.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 784 ச.மீ. பரப்பளவில் தரைதளம் மற்றும் நான்கு மேல் தளங்கள் என்ற அமைப்பில் புதிய கட்டடம் பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தில் கட்டப்படுகின்றன. இக்கட்டடம், பொதுவான அலுவலக இடவசதியுடன் போட்டித்தோ்வுக்கு பயிலும் மாணவா்களுக்கு ஸ்மாா்ட் பலகை வசதியுடன் கூடிய வகுப்பறை, அனைத்து போட்டித் தோ்வுக்குமான புத்தகங்கள் கொண்ட நூலகம், மாணவா்கள் படிப்பதற்கான அறை, மாதம்தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கான அறை போன்ற வசதிகளுடன் கட்டப்படுகிறது.அடிக்கல் நாட்டு விழாவில், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மாநகராட்சி மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ , மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா்கள் எம்.மரிய சகாய ஆண்டனி, ஹரிபாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com