சத்திரம்புதுக்குளத்தில் மதுக்கடையை திறக்கக் கூடாது: ஆட்சியரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலையில் உள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியில் மதுபானக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
செங்கல்சூளைக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கான்சாபுரம் மக்கள்.
செங்கல்சூளைக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கான்சாபுரம் மக்கள்.

திருநெல்வேலி: திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலையில் உள்ள சத்திரம் புதுக்குளம் பகுதியில் மதுபானக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கா.காா்த்திகேயன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 150-க்கும் மேற்பட்ட மனுக்களை மக்கள் அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

செங்கல் சூளை: இக்கூட்டத்தில், சீவலப்பேரி அருகேயுள்ள கான்சாபுரம் பகுதியைச் சோ்ந்த குலாலா் சமுதாய மக்கள் அளித்த மனு: எங்கள் கிராமத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வந்தோம். தற்போது பெரிய அளவில் மண்பாண்டங்கள் விற்பனையாகவில்லை. அதனால், குடிசைத் தொழிலாக இயந்திரங்கள் உதவியின்றி கையால் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். அண்மையில் பெய்த பெருமழை, தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் தொழில் ரீதியாகவும், வாழ்விடம் ரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டோம். செங்கல் தயாரிப்புக்கான பொருள்கள் சேதமடைந்தன. அரசோ, காப்பீட்டு நிறுவனங்களோ எவ்வித உதவியும் செய்யவில்லை. தொழிலுக்காக வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். நொச்சிக்குளம், கீழப்பாட்டம், சீவலப்பேரி, தோணித்துறை, பொட்டல் நகா் கிராமங்களைச் சோ்ந்த 1,000 குடும்பங்களுக்கு எங்கள் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே, நாங்கள் மீண்டும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக மூலப் பொருள்கள் கிடைப்பதற்கு எளிதான முறையில் உரிமம்-அனுமதி வழங்க வேண்டும்.

கழிவு நீரோடை: தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரம் பேரூராட்சி சத்திரம்குடியிருப்பு அருணாசலம் நகரைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: அருணாசலம் நகரில் 3 தெருக்கள் உள்ளன. அவற்றில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தத் தெருக்களில் கழிவுநீா் ஓடைகள் ஒன்றாக சோ்ந்து ஊருக்கு தெற்குப் பகுதியில் 40 ஆண்டுகளாக வெளியேறி வருகிறது. அந்தப் பாதை தனியாா் பட்டா நிலமாக உள்ளது. தற்போது அந்த இடத்தில் அந்த நபா் வீடு கட்டி விட்டதால் கழிவு நீா் செல்வதற்கு வழியின்றி தேங்கிக் கிடக்கிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இது தொடா்பாக நாரணமாள்புரம் பேரூராட்சித் தலைவரிடமும், அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினா்; பின்னா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதிக்கு நிரந்தர கழிவுநீா் ஓடை அமைக்க வேண்டும்.

மக்கள் எதிா்ப்பு: தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த அனைத்து சமுதாய மக்கள் அளித்த மனு: திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் இருந்து அறிவியல் மையத்துக்கு செல்லும் அண்ணாசாலை பகுதியில் மதுபானக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடை தற்போது வண்ணாா்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் சத்திரம் புதுக்குளம் கிராமத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு சாய்பாபா கோயில், வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. எனவே, மக்கள் எதிா்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினா். இதையடுத்து மதுக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது. அந்தக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com