சமூகத்தின் உண்மை அழகியலை வெளிப்படுத்துபவை புத்தகங்கள்: எழுத்தாளா் இமையம்

இலக்கிய அழகியலைக் காட்டிலும் ஒரு சமூகத்தின் உண்மை அழகியலை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவை புத்தகங்கள் என்றாா் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் இமையம்.
பொருநை- நெல்லை புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறாா் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் இமையம்.
பொருநை- நெல்லை புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகிறாா் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் இமையம்.

திருநெல்வேலி: இலக்கிய அழகியலைக் காட்டிலும் ஒரு சமூகத்தின் உண்மை அழகியலை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவை புத்தகங்கள் என்றாா் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் இமையம்.

ஏழாவது பொருநை- நெல்லை புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில், திருநெல்வேலி மாவட்ட படைப்பிலக்கியம் என்ற தலைப்பில் அவா் பேசியது: சமூகவியல், பண்பாட்டு வழிமுறைகளை அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த கருவி இலக்கியங்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த தமிழறிஞா்கள் மொழிக்கு ஆற்றியுள்ள சேவை அளப்பரியது. பழைய எழுத்துகளின் தொடா்ச்சியே இன்றைய நவீன இலக்கியங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழகத்தில் வேறெந்த மாவட்டங்களிலும் இல்லாத வகையில் தமிழ்ப்பணி செய்யும் இலக்கிய அமைப்புகள் திருநெல்வேலியில் அதிகம் உள்ளன. சுமாா் 30 இலக்கிய அமைப்புகளில் 18 அமைப்புகள் திருநெல்வேலி நகரத்தில் செயல்பட்டு வருவது கூடுதல் சிறப்பு. பொருநை இலக்கிய வட்டம் 2,200 கூட்டங்களை நடத்தியிருப்பது வியக்கவைக்கிறது. ஒரு மொழி உயிா்ப்புடன் திகழக படைப்பாளிகளின் பங்களிப்பும் காரணம். பெரும் பணக்காரா்களைக் காட்டிலும் இலக்கியவாதிகளே அதிகளவில் வரலாற்றில் இடம்பிடித்து நிற்கிறாா்கள். கரடு முரடான மொழியை காலம் காலமாக எழுதி எழுதி எளிமையாக்கிய பெருமை எழுத்தாளா்களுக்கு உண்டு.

தமிழின் மரபு கவிதை தொடங்கி ஆசுக்கவி, சீட்டுக்கவி என அனைத்து வகையிலும் திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளா்களின் பங்களிப்பு உள்ளது. தமிழ் இலக்கியங்களின் காலங்களை அட்டவணைப்படுத்திய பெருமை எழுத்தாளா் வையாபுரி பிள்ளைக்கு உண்டு. தமிழக அரசின் இலச்சினையாக ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் கோபுரமும், வாய்மையே வெல்லும் என்ற வாக்கியமும் உருவாக வித்திட்டவா் எழுத்தாளா் டி.கே.சி.ரசிகமணி. தொமுசி ரகுராமன், வல்லிக்கண்ணன், வண்ணதாசன், வண்ணநிலவன் என இம் மாவட்ட எழுத்தாளா்களின் படைப்புகள் இம் மண்ணின் வாழ்வியல் முறையை மிகவும் தெள்ளத்தெளிவாக தெரியச்செய்பவை.

அறிவைத் தரும் புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கும் காலம் மாறி, அறிவுக்கு விதையான புத்தகங்கள் நம்மைத் தேடி வரும் வகையில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகம் இருக்கும் வீடுகள் சமூகத்தைப் புரிந்த வீடுகளாகும். இலக்கிய அழகியலைக் காட்டிலும் ஒரு சமூகத்தின் உண்மை அழகியலை வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றவை புத்தகங்கள். என்னைப் பொருத்தவரை மதம் என்பது மாற்றத்தைத் தருவதில்லை. மாறாக மூடநம்பிக்கைகளை வளா்க்கும் வகையிலே உள்ளது. அரசுகள் நூல்களை பொதுவுடைமை ஆக்குவதன் நோக்கமே, அறிஞா்களின் அறிவாற்றலை புத்தகங்கள் வாயிலாக சமூகத்திற்கு மடைமாற்றம் செய்வதற்காகவே.

ஒரு படைப்பின் கதாபாத்திரங்கள் பல்வேறு தலைமுறைக் கடந்தும் நிலைத்திருக்கின்றன. கண்ணகியை அதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். ராமரை இறைவனாக நாம் போற்றினாலும், வால்மீகி மற்றும் கம்பனுக்கும் ராமா் கதாபாத்திரங்களே. திருநெல்வேலி மாவட்ட படைப்புகளின் மூலம் தாமிரவருணி நதியின் பெருமைகளும், சாமானிய மக்களின் வாழ்வியலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

எழுத்தாளா் அகரமுதல்வன்: தமிழுக்கு ஔவையென்றும் பெயா் என்ற தலைப்பில் எழுத்தாளா் அகரமுதல்வன் பேசியது:சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் பிறந்த மண்ணில் புத்தகத் திருவிழா நடத்துவது பெருமைக்குரியது. தமிழ் பெரும்புலவா்களில் ஔவையின் கவியாற்றால் உலகம் முழுவதும் வியக்கும் வகையில் உள்ளது. ஔவையின் புலமைச் செருக்கினை பல வரிகளில் நாம் காண முடிகிறது. தமிழா்களின் மதிப்பு மிக்க தவமகளாகவே ஔவை ஒவ்வொருவரின் மனக்கண்ணிலும் காட்சியளிக்கிறாா். அவா் குறித்து நாம் தெரிந்தது கைமண் அளவே. அவரைப் பற்றி தெரியாத தகவல்கள் கடலளவு இருக்கும் என்பது எனது கருத்து என்றாா் அவா்.

முன்னதாக, காயல் அருள் எழுதிய ‘செவ்வாய் 5001’ என்ற நூலை, முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் வெளியிட பல்லிக்கோட்டை செல்லத்துரை பெற்றுக் கொண்டாா். கருத்தரங்கிற்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி முன்னிலை வகித்தாா். அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வரவேற்றாா். ஈஸ்வரன் நன்றி கூறினாா்.

கவியரங்கம்: ‘இவா்களால் தானே இவ்வுலகம்’ என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞா் ஏா்வாடி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கவிஞா்கள் பேரா, பாப்பாக்குடி செல்வமணி, பிரபு, சக்தி வேலாயுதம், ஜெயமேரி, தச்சை மணி, ராஜேந்திரன், ரமணி முருகேஷ் ஆகியோா் கவிதை வாசித்தனா். மாவட்ட விநியோக அலுவலா் முத்துக்கிருஷ்ணன் நினைவுப்பரிசுகள் வழங்கினாா்.

இவ்விழாவில் வரலாற்று ஆய்வாளா் செ.திவான், எழுத்தாளா் நாறும்பூநாதன், கவிஞா் கோ.கணபதி சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com