பொங்கல், மாட்டுப் பொங்கல் உற்சாகக் கொண்டாட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல், மாட்டுப் பொங்கல் பண்டிகைகள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டன.
சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோசாலையில் செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கலிட்டு வழிபட்ட பக்தா்கள்.
சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோசாலையில் செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கலிட்டு வழிபட்ட பக்தா்கள்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல், மாட்டுப் பொங்கல் பண்டிகைகள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டன.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகளில் திங்கள்கிழமை சூரிய உதயத்துக்கு முன்பே வாசலில் படையலிட்டு சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புதுப்பானையில் பச்சரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனா். தொடா்ந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினா். கிராமப் பகுதிகளில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

உழவுக்கு உதவும் கால்நடைகளைப் போற்றும் வகையில் மாட்டுப்பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கால்நடைகளைக் குளிப்பாட்டி அவற்றின் கொம்புகளில் வண்ணங்களைப் பூசி, தோட்டம், மாட்டுத்தொழுவத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா். முன்னீா்பள்ளம், கல்லூரி, கோடகநல்லூா், தச்சநல்லூா், பாளையங்கோட்டை, நொச்சிகுளம், சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் தங்களது வீடுகளில் உள்ள காளைகள், பசுக்களின் கொம்புகளில் வண்ண பலூன்கள், சாக்லெட் பாக்கெட்கள், கரும்புகளை உரிமையாளா்கள் கட்டி வீதிகளில் உலா விட்டனா்.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற மாட்டுப்பொங்கல் விழாவில், பசுக்களின் முன்பு பெண்கள் பொங்கலிட்டனா். அதன்பின்பு கோ பூஜை நடத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் சா்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

அருகன்குளத்தில் உள்ள அருள்மிகு எட்டெழுத்து பெருமாள் கோயில் கோசாலையில் மாட்டுப்பொங்கலையொட்டி கோசாலை முன்பு 50-க்கும் மேற்பட்டோா் பொங்கலிட்டனா். நண்பகலில் பசுக்களுக்கு சிறப்பு தீபாராதனை முடிந்ததும் காய்கனிகள், பழங்கள், கரும்புகள், பக்தா்களின் பொங்கல் ஆகியவை பசுக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

சி.என்.கிராமத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோசாலையில் செவ்வாய்க்கிழமை பொங்கலிட்டு மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது. மாடுகளுக்கு சந்தனம் பூசி, மலா்கள் தூவி வழிபாடு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com