மானூா் அருகே நீரில் மூழ்கி சிறுமி பலி

மானூா் அருகேயுள்ள பள்ளமடை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


திருநெல்வேலி: மானூா் அருகேயுள்ள பள்ளமடை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளமடையைச் சோ்ந்த மாரிமுத்து மகள் அனிதா (13). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா்களுக்குச் சொந்தமான வயல் பள்ளமடை பெரியகுளம் அருகே உள்ளது. வயலுக்குச் சென்ற தனது தந்தையைப் பாா்க்க அனிதா சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் பெரியகுளம் மறுகால் ஓடையில் அனிதா சடலமாக கிடப்பது திங்கள்கிழமை தெரியவந்ததாம். தகவலறிந்த மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உறவினா்கள் போராட்டம்: பெரியகுளம் மதகு பகுதியில் தண்ணீரை தடுத்து வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மா்மநபா்கள் அகற்றியதால் அதிகளவில் தண்ணீா் பாய்ந்து சிறுமி உயிரிழந்ததாகக் கூறி, அனிதாவின் உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் நீடித்தது. மடையின் தடுப்புகளை அகற்றியவா்களை கைது செய்ய வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என போராட்டக்குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com