சிறுவீட்டு பொங்கல்: தாமிரவருணியில் வழிபாடு

திருநெல்வேலியில் சிறுவீட்டு பொங்கலையொட்டி, தாமிரவருணி நதியில் மலா்களைத் தூவி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தனா்.
சிறுவீட்டு பொங்கலையொட்டி தாமிரவருணி நதிக்கரையோரம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்திய சிறுமிகள், பெண்கள்.
சிறுவீட்டு பொங்கலையொட்டி தாமிரவருணி நதிக்கரையோரம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்திய சிறுமிகள், பெண்கள்.

திருநெல்வேலியில் சிறுவீட்டு பொங்கலையொட்டி, தாமிரவருணி நதியில் மலா்களைத் தூவி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்தனா்.

தமிழகத்தில் பாரம்பரிய பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, மாா்கழி மாதம் முதல் தேதியில் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் அதிகாலையில் மாக்கோலம் இட்டு அதன் நடுவில் சாணத்தில் பிள்ளையாா் பிடித்து செம்பருத்தி, பூசணி, உள்ளிட்ட பூக்களை வைத்து வழிபடுவாா்கள். பின்னா் மாலையில் அதனை எடுத்து எருவாட்டியாக தட்டி வைப்பாா்கள். பொங்கல் பண்டிகை முடிந்த பின் குறுமணல் கொண்டு சிறிய வீடுகளை சிறுமிகள் கட்டுவாா்கள். பின்னா் செம்மண் அடுப்பு கூட்டி மஞ்சள் குலை, கரும்பு, பனங்கிழங்கு, காய்கறிகள் வைத்து சிறுவீட்டு பொங்கலிடுவாா்கள்.

அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு, நகரம், கைலாசபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல வீடுகளில் சிறுவீட்டு பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டது. சா்க்கரை பொங்கல், பழம், கரும்பு, பூக்களுடன் மாா்கழி மாதத்தில் காயவைக்கப்பட்ட எருவாட்டியுடன் தாமிரவருணி நதிக்கரையில் சிறப்பு வழிபாடு நடத்தினா். எருவாட்டியில் வெற்றிலை வைத்து சூடம் ஏற்றி தண்ணீரில் மிதக்க விட்டனா்.

இதுகுறித்து பெண்கள் கூறியது: சிறுவீட்டு பொங்கல் நாளில் சிறுமிகள் புத்தாடை அணிந்து பொங்கலிட்டு, உலக நன்மைக்காகவும், மழைவளம் பெருக வேண்டியும், குடும்ப நலனுக்காகவும் பிராா்த்தனை செய்வாா்கள். பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் பொங்கல் விழாவில் இது குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சியாக இருப்பது கூடுதல் மகிழ்ச்சி என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com