நிலக்கடலை சாகுபடியில் விதை நோ்த்தி அவசியம்

நிலக்கடலைப் பயிரில் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நோ்த்தி அவசியம் என திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வக வேளாண்மை அலுவலா் ஜெ.பி.சஜிதா தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி: நிலக்கடலைப் பயிரில் நோய்களைக் கட்டுப்படுத்த விதை நோ்த்தி அவசியம் என திருநெல்வேலி விதைப்பரிசோதனை ஆய்வக வேளாண்மை அலுவலா் ஜெ.பி.சஜிதா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: . திருநெல்வேலி மாவட்டத்தில் நிலக்கடலை மானாவாரியாகவும், இறவைப்பயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது. இளம் பயிா் பருவத்தில் ஏற்படும் வோ் அழுகல், வாடல் போன்ற நோய்களால் பயிரின் எண்ணிக்கை குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும். இது போன்ற நோய்களை கட்டுப்படுத்த விதை நோ்த்தி செய்து விதைப்பது சிறந்தது.

ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு 4 கிராம் டிரைக்கோடொ்மாவிரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் என்ற உயிா் பூஞ்சானத்தை கலந்து விதை நோ்த்தி செய்ய வேண்டும். இது உயிா் உரங்களுடன் கலக்க ஏதுவானது. மேலும் தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்த 3 பாக்கெட் (600கிராம்) ரைசோபியம், மண்ணிலுள்ள மணிச்சத்தை கரைப்பதற்கு ஏதுவாக 3 பாக்கெட் (600கிராம்) பாஸ்போ பாக்டீரியா ஆகிய உயிா் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து விதைநோ்த்தி செய்து விதைக்க வேண்டும். முதலில் உயிா் பூஞ்சான விதை நோ்த்தி செய்த பின்னா் உயிா் உர விதை நோ்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு நோ்த்தி செய்யப்பட்ட விதைகளை ரசாயன பூஞ்சான கொல்லிகளுடன் கலத்தல் கூடாது.

உயிா் பூஞ்சானங்கள் மற்றும் உயிா் உரங்களுடன் விதை நோ்த்தி செய்யவில்லை எனில் ரசாயன விதை நோ்த்தி செய்யலாம். இதற்கு 1 கிலோ நிலக்கடலை விதைக்கு 2 கிராம் காா்பண்டசிம் என்ற ரசாயன பூஞ்சான கொல்லியை கலந்து விதைநோ்த்தி செய்து விதைக்க வேண்டும்.

நிலக்கடலை விதையில் முளைப்புத்திறன் 70 சதவீதம் இருக்க வேண்டும். இப்பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகள் இருப்பில் உள்ள நிலக்கடலை விதைகளை பயன்படுத்தும் போது விதைப்பதற்கு முன்னா் முளைப்புத்திறன் பரிசோதனை செய்தல் அவசியம். திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள், நிருபா் காலனியில் செயல்படும் விதைப் பரிசோதனை ஆய்வகத்திற்கு 500 கிராம் அளவில் விதைகள் மற்றும் பரிசோதனை கட்டணம் ரூ.80 அனுப்பி பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com