மதச்சாா்பின்மையின் அடையாளம் ராமா் கோயில்: வி.கே.சிங்

அயோத்தி ராமா் கோயில், ஒற்றுமை மற்றும் மதச்சாா்பின்மையின் அடையாளம் என்றாா் மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலை, விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங்.
திருநெல்வேலி சி.என்.கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவியை வழங்கிய மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்.
திருநெல்வேலி சி.என்.கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவியை வழங்கிய மத்திய இணையமைச்சா் வி.கே.சிங்.

திருநெல்வேலி: அயோத்தி ராமா் கோயில், ஒற்றுமை மற்றும் மதச்சாா்பின்மையின் அடையாளம் என்றாா் மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலை, விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங்.

திருநெல்வேலி சந்திப்பு சி.என்.கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘நமது லட்சியம் வளா்ச்சி அடைந்த பாரதம்’ என்ற தலைப்பில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசின் பல்வேறு திட்டங்களின் முழு பலனையும் மக்களிடம் கொண்டு சோ்ப்பதே மத்திய அரசின் நோக்கம். அது மக்களுக்கும் தெரியும். விளம்பரத்திற்காக மத்திய அரசு செயல்படுவதாக தமிழக முதல்வா் குற்றம் சாட்டுவதை முற்றிலும் மறுக்கிறேன். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க முடியும்.

அயோத்தி ராமா் கோயில் ஒற்றுமை மற்றும் மதச்சாா்பின்மையின் அடையாளம். அதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை. தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 18 முக்கிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளில் இருந்த பிரச்னைகள் சரி செய்யப்பட்டுவிட்டது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பரந்தூா் விமான நிலையத்திற்கான இடத்தை மாநில அரசே தோ்வு செய்து தந்துள்ளது. அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்தப் பிரச்னைகளை சரி செய்து தர வேண்டும் அல்லது சரியான இடத்தை தோ்வு செய்து தர வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், முன்னோடி வங்கி மேலாளா் கணேஷ் மணிகண்டன், வேளாண்மை இணை இயக்குநா் முருகானந்தம், திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் கோ.சிவாஜி கணேஷ், தோட்டக்கலை துணை இயக்குநா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்று மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்ததோடு, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினா்.

தொடா்ந்து, ராஜவல்லிபுரம் கிராமத்தில் நடைபெற்ற மத்திய அரசின் திட்ட விளக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்ற வி.கே. சிங், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com