தில்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கும் கீழபாட்டம் சுகாதார ஊக்குவிப்பாளா்!

தில்லியில் மத்திய அரசு சாா்பில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழபாட்டத்தைச் சோ்ந்த சுகாதார ஊக்குவிப்பாளா் உள்பட தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் பங்கேற்கிறாா்கள்.
சுமதி
சுமதி

திருநெல்வேலி: தில்லியில் மத்திய அரசு சாா்பில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழபாட்டத்தைச் சோ்ந்த சுகாதார ஊக்குவிப்பாளா் உள்பட தமிழகத்தைச் சோ்ந்த 7 போ் பங்கேற்கிறாா்கள்.

மத்திய அரசு சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை (ஜன. 26) நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக பணியாற்றிய சுகாதார ஊக்குவிப்பாளா்களை கெளரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தைச் சோ்ந்த 7 சுகாதார ஊக்குவிப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த விழாவில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கீழப்பாட்டம் ஊராட்சியில் பணியாற்றும் சுகாதார ஊக்குவிப்பாளா் சுமதியும் பங்கேற்றுள்ளாா்.

இதுகுறித்து சுகாதார ஊக்குவிப்பாளா் சுமதி கூறியது: கீழப்பாட்டம் ஊராட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக சுகாதார ஊக்குவிப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். எங்களது ஊராட்சியின் கீழ் கீழபாட்டம், கொமந்தாநல்லூா், அண்ணாநகா், திருத்து, அவினாப்பேரி கிராமங்களில் 1300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். எங்கள் கிராமத்தில் சுகாதாரம் பேணி தூய்மையை மேம்படுத்தும் பணியை ஊக்குவித்து வருகிறேன். கழிப்பறை பயன்பாட்டை அதிகரிப்பது, தனிநபா் மற்றும் உறிஞ்சி குழிகள் மூலம் கழிவுநீா் சாலைகளில் வெளியேறாமல் தடுப்பது, இவற்றை அமைக்க அரசு சாா்பில் அளிக்கப்பட்டு வரும் மானியங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளோம்.

எங்கள் ஊராட்சியில் எனது விழிப்புணா்வால் 400 வீடுகளில் கழிப்பறைகளும், 50 தனிநபா் உறிஞ்சி குழிகளும், 25 சமுதாய உறிஞ்சி குழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதுதவிர திடக்கழிவில் மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை பிரித்து மக்கள் அளிப்பது, தூய்மைக் காவலா்களைக் கொண்டு சேகரித்து உரமாக்கும் பணிகளும் செய்யப்பட்டுள்ளன. எங்களது ஊராட்சி பணியாளா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் உதவியுடன் தூய்மை மிகுந்த ஊராட்சியாக கீழப்பாட்டம் மாறியுள்ளது. எங்களது கூட்டு முயற்சியின் பலனாக கடந்த 2019 ஆம் ஆண்டில் காந்தி ஜயந்தி நாளில் குஜராத்தில் நடைபெற்ற விழாவில் விருது பெற்று திரும்பினேன்.

இப்போது மத்திய அரசு சாா்பில் குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீதிதோறும் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தியமைக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக பாா்க்கிறேன். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com