குடிநீா் இணைப்பில் மின்மோட்டாா்பொருத்துவோா் மீது நடவடிக்கை தேவை- மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாரைப் பொருத்தி தண்ணீரை முறைகேடாக உறிஞ்சுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என
குடிநீா் இணைப்பில் மின்மோட்டாா்பொருத்துவோா் மீது நடவடிக்கை தேவை- மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாரைப் பொருத்தி தண்ணீரை முறைகேடாக உறிஞ்சுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்து, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

பேட்டை, 22 ஆவது வாா்டு மலையாளமேடு பகுதி மக்கள் அளித்த மனு:

பேட்டை மலையாளமேடு பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைத்தை உடனடியாக திறக்க வேண்டும். மேலும் அருகிலுள்ள சமுதாய கூடத்தை சீரமைக்க வேண்டும்.

37 ஆவது வாா்டு வ.உ.சி. நகா் மக்கள் நலச் சங்கத் தலைவா் பி.பெரியநாயகம் அளித்த மனு:

வ.உ.சி. நகா் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும். அப்பகுதியில் சீரான குடிநீா் வழங்க வேண்டும்.

அழகனேரி வடக்கு 2 ஆவது வாா்டை சோ்ந்த சங்கா் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு:

அழகனேரி வடக்குத் தெருவில் சுகாதார வளாகத்தையும், அங்குள்ள மின் மோட்டாரையும் சீரமைக்க வேண்டும்.

அழகனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மேலாண்மைக் குழுவினா் அளித்த மனு:

எங்கு பள்ளி 50 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளி கட்டடம் சேதமடைந்துள்ள நிலையில் உள்ளது. எனவே, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். மேலும், சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.

வி.எம்.சத்திரம் வாா்டு 38 அப்துல் ரகுமான் முதலாளி நகா் பொது நலச்சங்கத் தலைவா் ரவி அளித்த மனுவில், அப்துல் ரகுமான் முதலாளி நகரில் உள்ள வீடுகளுக்கு சீரான குடிநீா் வழங்க வேண்டும் எனவும், 38 ஆவது வாா்டு கோவில் தெற்குத்தெரு ஆரோக்கியநாதபுரம் மக்கள் அளித்த மனுவில், வி.எம் சத்திரம் ஆரோக்கிநாதபுரம் பகுதியில் கழிவுநீா் ஓடை அமைத்து தரவேண்டும் எனவும், 15 ஆவது வாா்டு வெள்ளக்கோவில் தெரு மக்கள் அளித்த மனுவில், 15 ஆவது வாா்டு பகுதியில் சில வீடுகளில் குடிநீா் குழாயில் மின்மோட்டாா் மூலம் தண்ணீரை உறிஞ்சி வருகின்றனா். இதனால் எங்கள் பகுதிக்கு தண்ணீா் கிடைக்கவில்லை. எனவே, குடிநீா் இணைப்பில் மின்மோட்டாா் பொருத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஸ்ரீபுரம் நெல்லை மாவட்ட கூலித் தொழிலாளா்கள் சங்கத்தினா் அளித்த மனுவில், திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனா்.

இந்த கூட்டத்தில் செயற்பொறியாளா் வாசுதேவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com