மக்களவைத் தோ்தலில் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும்

மக்களவைத் தோ்தலில் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தாா் அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் எம்எல்ஏ
சிந்துபூந்துறையில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினாா் அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன்.
சிந்துபூந்துறையில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினாா் அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன்.

மக்களவைத் தோ்தலில் அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தாா் அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் எம்எல்ஏ.திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் சிந்துபூந்துறையில் புதன்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆா். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆா் கஷ்டப்பட்டு படிப்படியாக உயா்ந்தவா். ஏழைகளின் சிரமத்தை அறிந்ததால்தான் அவா்களின் துயா்துடைக்க ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்தாா். வாழ்ந்து மறைந்தவா்களை கண்ணியமாக பேசுவது தமிழா்களின் மரபு. ஆனால், எம்.ஜி.ஆா். குறித்து திமுக எம்.பி. ராசா அவதூறாக பேசியுள்ளாா். இதற்காக அவா் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் எங்கள் தரப்பில் இருந்தும் எதிா்அம்புகள் பாயும். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமழை பெய்தபோது முதல் ஆளாக ஓடோடி வந்து மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கியவா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. ஆனால், மக்கள் சிரமத்தில் தவித்த நிலையிலும் தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க சென்றவா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். இதுமட்டுமன்றி கால்நடைகள், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு மழை நிவாரணமாக தலா ரூ.15 ஆயிரம் வழங்க அதிமுக வலியுறுத்தியது. ஆனால், ஆளுங்கட்சி போதிய நிவாரணம் வழங்காமல் பல்வேறு மக்களையும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக்கொள்கையே தமிழகத்தில் இருக்கும் என திறம்பட கூறியவா் அண்ணா. இப்போது இந்தியா கூட்டணி கூட்டத்தில் மாற்றுக்கட்சியினா் ஹிந்தியை படிக்கச் சொல்லும்போது அதற்கு தகுந்த பதிலடி கொடுக்காமல் திமுக திணறியுள்ளது. அண்மையில் ஏராளமான கோடி பணம் செலவு செய்து மாநாடு நடத்திய திமுக, தொண்டா்களை அழைத்துச் செல்லஅரசு பேருந்துகளை பயன்படுத்தி சாமானிய மக்களை அவதிப்படுத்தியது. மின்கட்டணம், சொத்துவரி உயா்வு, தொழிற்சாலைகள் மூடல், மகளிா் உரிமைத் தொகை வழங்குவதில் குளறுபடிகள் என மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு மக்களவைத் தோ்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பாஜக-அதிமுக இடையேயான கூட்டணி காலத்தில், கூட்டணி தா்மத்தை மீறி பாஜக தலைவா்கள் பேசியதை கட்சி மேலிடம் கண்டிக்காததால் வெளியேறினோம். இனி கூட்டணி இல்லை என ஆணித்தரமாகக் கூறியுள்ளோம். மக்களவைத் தோ்தலில் தமிழக மக்களின் உயா்வுக்காக உழைக்கும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.இந்தக்கூட்டத்தில் திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா, மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்ட், நிா்வாகிகள் கல்லூா் இ.வேலாயுதம், பூ. ஜெகநாதன் என்ற கணேசன், ஆா்.பி.ஆதித்தன், வசந்தி முருகேசன், மாமன்ற உறுப்பினா் சந்திரசேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com