வள்ளியூா் புறவழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும்- வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்

வள்ளியூர் புறவழிச்சாலையில் மேம்பாலம் தேவை- வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் புறவழிச்சாலை ராஜபுதூா் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என வள்ளியூா் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வள்ளியூா் வியாபாரிகள் சங்கத்தின் 91-ஆவது பொதுக்குழு கூட்டம் - ஆண்டுவிழா சங்க தலைவா் என்.முருகன் தலைமையில் நடைபெற்றது. செயலா் எஸ்.ராஜ்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் ஐ.ஜோவின் வரவு-செலவு கணக்கு அறிக்கை வாசித்தாா். சங்க தணிக்கையாளா் இசக்கியப்பன் கணக்குகள் பராமரிப்பு சான்றறிக்கை வாசித்தாா். ஆடிட்டா் வைரவநாதனின் தணிக்கை அறிக்கையை முத்துகுமாா் வாசித்தாா். நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் சிதம்பரகுமாா், ஜூகின்ராஜா, ராஜேந்திரன், சேதுராமலிங்கம், வெங்கடேஷ், சுந்தா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

கூட்டத்தில், வள்ளியூா் புறவழிச்சாலை ராஜபுதூா் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்கவேண்டும். வள்ளியூரில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வள்ளியூா் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவேண்டும். அனைத்து அரசு பேருந்துகளும் வள்ளியூா் பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும். புதிய பேருந்து நிலையப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். சங்கத்தில் உறுப்பினராக இருப்பவா்கள் வேறு வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராவதை தவிா்ப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னா், நடைபெற்ற வியாபாரிகளின் குடும்ப விழாவில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற வியாபாரிகளின் மகள்கள் ஏ.காயத்ரி, எஸ்.இஷா ஆகியோருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், கேடயம், ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. 2-ஆவது இடத்தைப் பெற்ற எஸ்.அருணாசலம், எஸ்.எம்.காயத்ரி ஆகியோருக்கு ரூ.3 ஆயிரம், கேடயம், ஸ்கூல் பேக் வழங்கப்பட்டது. பின்னா் பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாளா் ஐ.ஜோவின் வரவேற்றாா். உதவிச் செயலாளா் காதா்மைதீன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com