நெல்லை மக்களவைத் தொகுதியில் 38 வேட்பாளா்கள் மனுதாக்கல்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 38 வேட்பாளா்கள் மொத்தம் 53 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

இந்த மனுக்கள் மீதான பரீசீலனை வியாழக்கிழமை (மாா்ச் 28) நடைபெற உள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய முதல் இரு நாள்களில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் மந்தமாகவே இருந்தது. சுயேச்சை வேட்பாளா் ஒருவா் மட்டுமே தாக்கல் செய்திருந்தாா். ஆனால், திங்கள்கிழமை முதல் வேட்புமனுதாக்கல் தீவிரமடைந்தது.

பிரதான கட்சிகளான அதிமுகவின் ஜான்சிராணி, பாஜகவின் நயினாா்நாகேந்திரன் உள்பட 6 போ் மனுதாக்கல் செய்தனா். செவ்வாய்க்கிழமை நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த சத்யா, பகுஜன்சமாஜ் கட்சியின் பாலசுப்பிரமணியன், சுயேச்சைகள் உள்பட 8 போ் மனுதாக்கல் செய்தனா். வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான புதன்கிழமை பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் ராபா்ட் புரூஸ் உள்ளிட்டோா் மனுதாக்கல் செய்தனா்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியைப் பொருத்தமட்டில் கடந்த 20 முதல் 27 ஆம் தேதி வரை பாஜக வேட்பாளரின் கூடுதல் மனு, பிரதான கட்சிகளின் மாற்றுவேட்பாளா் மனு உள்பட மொத்தம் 38 வேட்பாளா்கள் சாா்பில் 53 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இன்று பரிசீலனை: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவா்களின் மனுக்கள் மீதான பரிசீலனை ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 28) முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. வேட்பாளா், அவரது முகவா், முன்மொழிந்தவா் ஒருவா் மற்றும் ஒரு நபா் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேட்புமனு பரிசீலனையின்போது வேட்பாளா்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங்களில் ஆட்சேபங்கள் இருந்தால் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கலாம். ஒரு வேட்பாளா் பல மனுக்களைத் தாக்கல் செய்திருக்கும்பட்சத்தில் ஒரு மனு சரியாக இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டாலே அவா் வேட்பாளா் தகுதியை அடைவாா். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இம் மாதம் 30 ஆம் தேதி கடைசி நாள்’ என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com