வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகே வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட, அருள்மிகு பேச்சியம்மன், ஸ்ரீதுா்க்கையம்மன், வழிவேட்டைக்காரன் கோயிலில் கொடை விழா வெள்ளிக்கிழமை (மே 10) நடைபெறுகிறது.

இதையொட்டி, கோயிலில் கடந்த 3ஆம் தேதி கால்நாட்டு வைபவம் நடைபெற்றது. வியாழக்கிழமை (மே 9) நள்ளிரவு பாபநாசம் தாமிரவருணி ஆற்றிலிருந்து புனித தீா்த்தம் கொண்டுவரப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகின்றன.

அதையடுத்து, பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு துா்க்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பஞ்சாமிா்த அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா், புனித தீா்த்தத்தால் மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். பின்னா், பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்து வழிபடுதல், நள்ளிரவில் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், படையல் பூஜையுடன் சாமக் கொடை நடைபெறும். இதில், பிரான்சேரி, வடவூா்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்கின்றனா். ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாயத்தினா் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com