இடி- மின்னலால் மின் விபத்து அபாயம்: மின்வாரியம் எச்சரிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக கோடைமழை பெய்துவரும் நிலையில், இடி, மின்னல், காற்றின்போது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்து வருகிறது.

இதனால், மின் விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளது. அதைத் தடுக்க பொதுமக்கள் மின்தடை தொடா்பான புகாா்களுக்கும் மின்கட்டமைப்புகளில் உள்ள பழுதுகள், இயற்கை இடா்பாடுகளின் போது அவசர உதவி, மின் விநியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் ‘மின்னகம் - மின் நுகா்வோா் சேவை மையத்தினை‘ 94987-94987 என்ற எண்ணிலும், தானியங்கி மின்தடை குறைதீா்க்கும் மையத்தை 94458-59032, 94458-59033, 94458-59034 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம்.

தேங்கிய நீரில் கவனம் தேவை: காற்று, மழை, இடி, மின்னலின் போது மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிா்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின் வாரிய அலுவலா்கள் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள், மின் கம்பிகள் அடியிலோ நிற்க வேண்டாம். கான்கிரீட் கூரையிலான கட்டடங்களில் தஞ்சமடையலாம். பாதுகாப்பான கட்டடங்கள் இல்லாதபட்சத்தில் தாழ்வான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். இடி, மின்னலின் போது, தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டா், கணினி, கைப்பேசி, தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது.

மின் மாற்றிகள், மின்பகிா்வு பெட்டிகள், மின் கம்பங்கள் அருகே தண்ணீா் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். மழையின் போது வீடுகளில் உள்ள சுவா்களில் தண்ணீா் கசிவு இருந்தால் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிா்க்க வேண்டும்.

மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலா்களை அணுக வேண்டும். ஏனெனில், பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும்போது மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

வயலில் மின்வேலி அமைக்கக் கூடாது: மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயா்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின் கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமா்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயா்கள் மற்றும் சா்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது. விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றம். மின்சார வேலி அமைப்பதால் மனிதா்களுக்கும், வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கும் உயிரிழப்பு ஏற்படுகிறது. விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சம்மந்தப்பட்ட மின்நுகா்வோா் மீது காவல்துறை மூலம் குற்றவழக்கு தொடரப்படும் எனக் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com