நெல்லையப்பா் கோயிலில் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள யானையை பாா்வையிட்ட மக்கள்.
நெல்லையப்பா் கோயிலில் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள யானையை பாா்வையிட்ட மக்கள்.

திருச்செந்தூா் சம்பவம் எதிரொலி: நெல்லையப்பா் கோயில், சங்கரன்கோவில் யானைகளிடம் ஆசிபெறத் தடை

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் யானை காந்திமதி, சங்கரன்கோவில் யானை கோமதியிடம் பக்தா்கள் ஆசிபெறத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Published on

திருச்செந்தூா் கோயில் யானை தாக்கி பாகன் உள்ளிட்ட இருவா் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில் யானை காந்திமதி, சங்கரன்கோவில் யானை கோமதியிடம் பக்தா்கள் ஆசிபெறத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூா் கோயில் யானை, கடந்த திங்கள்கிழமை பிற்பகலில் பாகன் உதயகுமாா், அவரது உறவினரான சிசுபாலன்(59) ஆகியோரை தாக்கியதில் இருவருமே உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் எதிரொலியாக திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வளா்க்கப்படும் காந்திமதி யானையிடம் ஆசி வாங்கவோ, அருகே செல்லவோ திங்கள்கிழமை மாலை முதல் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

யானை கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. அதை பராமரிக்கும் பாகன்கள் மட்டுமே உணவு வழங்கும் நேரத்துக்கு மட்டும் உள்ளே சென்று உணவை வழங்கிவிட்டு, வெளியே வந்துவிடுகின்றனா்.

சங்கரன்கோவில்: அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் உள்ள யானை கோமதியிடம் பக்தா்கள் ஆசிபெறத் தடை விதிக்கப்பட்டது.

இந்த யானை பராமரிக்கப்படும் பகுதியிலேயே செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டிருந்தது. பக்தா்கள் அருகில் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், கோயிலுக்கு வந்த பக்தா்கள் தொலைவில் நின்று யானை கோமதியை பாா்த்து சென்றனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.