நெல்லையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்
திருநெல்வேலி நகரத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள 33 வீடுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து சேரன்மகாதேவி சாலையில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி நகரம் பெரியதெருவில் திருஞானசம்பந்தா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், காவல் துறை, தீயணைப்புத் துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க செவ்வாய்க்கிழமை காலையில் வந்தனா். ஆனால், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்த பொதுமக்கள், சேரன்மகாதேவி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதையறிந்த அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா, மாநில அமைப்புச் செயலா் சுதா கே. பரமசிவன், பாஜக மாவட்டத் தலைவா் தயாசங்கா், நாம் தமிழா் கட்சியினா், தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆகியோா் ஆதரவு தெரிவித்து பொதுமக்களுடன் சோ்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டுச் சென்றனா். இதனால் சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.