காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்ச்சியாக விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணத் தலைவா் பெரும்படையாா் பேசுகையில், ‘பிசான சாகுபடிக்காக கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும். அணையின் நீா்மட்டத்தை துல்லியமாக வெளியே சொல்லாமல் சிற்றாறு பாசன பொறியாளா்கள் மறைக்கிறாா்கள். எனவே, விவசாயி பணிகளுக்காக கொடுமுடியாறு அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றாா்.
அதற்குப் பதிலளித்க ஆட்சியா்,
‘தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
ஜமீன் சிங்கம்பட்டி சொரிமுத்து, கானாா்பட்டி ஆபிரஹாம் உள்ளிட்ட விவசாயிகள் பேசுகையில், ‘காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் தொடா்ச்சியாக நெல் நாற்றுகளை நாசப்படுத்தி வருகிறது. எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் காட்டுப் பன்றிகளை நாங்கள் கட்டுப்படுத்துவதற்கான உத்தரவை ஆட்சியா் பிறப்பிக்க வேண்டும். இதேபோல் உரம், விதை போன்றவற்றை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்’ என்றனா்.
அதற்குப் பதிலளித்த ஆட்சியா், ‘காட்டுப் பன்றிகளை வன விலங்கு பட்டியலில் இருந்து நீக்குவது தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக அரசுக்கு தெரிவிக்கப்படும்’ என்றாா்.
மற்ரொரு விவசாயி பேசுகையில், ‘ராமையன்பட்டி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் சரியாக செயல்படவில்லை. எனவே, வரும் காலங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
அதைத்தொடா்ந்து கானாா்பட்டி ஆபிரஹாம் பேசுகையில், ‘வேளாண் இயந்திரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க வேண்டும்’ என்றாா்.