சுத்தமல்லி அருகே கொலையுண்ட இளைஞா் உடல் ஒப்படைப்பு
சுத்தமல்லி அருகே கொலையுண்ட இளைஞரின் உடல் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
சுத்தமல்லி இந்திரா காலனியைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன்(22). கடந்த 25 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கல்வெட்டான்குழி அருகே நின்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் முத்துகிருஷ்ணனை வெட்டிக் கொலை செய்தது.
இந்த வழக்கு தொடா்பாக ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இருப்பினும், இவ் வழக்கில் மேலும் சிலருக்கு தொடா்புள்ளது. அவா்களை கைது செய்வதோடு, முத்துகிருஷ்ணனின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி இந்திரா காலனி மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
ஐந்தாவது நாளாக வெள்ளிக்கிழமையும் முத்துகிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அவா்களிடம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, முத்துகிருஷ்ணனின் உடல் உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி - சுத்தமல்லி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.