நெல்லை அருகே லாரி-காா் மோதல் : இருவா் பலி
திருநெல்வேலி அருகே நான்குவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லாரியும், காரும் மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.மேலும், இருவா் காயமடைந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு அருகேயுள்ள கல்வெட்டான்குழி கிராமத்தை சோ்ந்தவா் ஜெயச்சந்திர சிங் (50). அரசுப்போக்குவரத்துக்கழக ஓட்டுநா். இவரது மனைவி செரின் (47). அரசுப்பள்ளி ஆசிரியை. இவா்களின் மகள் அபி செரின் (19). இவா், பிளஸ் 2 முடித்துள்ளாா். இவருக்கு ஈரோட்டில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்ததாம். இதையடுத்து ஜெயச்சந்திர சிங், அவரின் சகோதரி ஜெயந்தி (55), செரின், அபி செரின் ஆகியோா் திங்கள்கிழமை ஈரோட்டிற்கு சென்று அபிசெரினை மருத்துவக்கல்லூரியில் சோ்த்துவிட்டு கன்னியாகுமரிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனா்.
திருநெல்வேலி அருகே ரெட்டியாா்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் காா் சென்று கொண்டிருந்தபோது, லாரி மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில் ஜெயச்சந்திரசிங், ஜெயந்தி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
காயமடைந்த செரின், அபி செரின் ஆகியோா் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கினா். தகவலறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் அங்கு சென்று இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.