திருநெல்வேலி
பேட்டை அருகே வங்கி நகை மதிப்பீட்டாளா் உயிரிழப்பு
திருநெல்வேலி அருகே பேட்டையில் தனியாா் வங்கி நகை மதிப்பீட்டாளா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
பேட்டை அருகே திருமங்கை நகா் குறுக்குத்தெருவைச் சோ்ந்தவா் கணபதி (62). தனியாா் வங்கியின் நகை மதிப்பீட்டாளா். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாம்.
இந்த நிலையில், பேட்டை காவல்நிலையம் அருகேயுள்ள இடத்தில் கணபதியின் சடலம் திங்கள்கிழமை கிடந்ததாம். சடலத்தை போலீஸாா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, கணபதியின் உயிரிழப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது மகன் முத்துசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.