உவரி கடலில் 104 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், களக்காடு, நான்குனேரி, வள்ளியூா், ராதாபுரம், திசையன்விளை பகுதிகளில் இருந்து 104 விநாயகா் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை உவரி கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டது.
கடந்த சனிக்கிழமை விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகளிலும் முக்கிய தெருக்களிலும், சாலை சந்திப்புகளிலும் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பல்வேறு ஊா்களில் பூஜை செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் அனைத்தும் வாகனங்களில் ஊா்வலமாக திசையன்விளைக்கு எடுத்து வரப்பட்டன.
திசையன்விளை அடைக்கலம்காத்த விநாயகா் கோயில் முன்பு அனைத்து விநாயகா் சிலைகளும் வந்து சோ்ந்ததும், அங்கிருந்து ஊா்வலமாக உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் அருகேயுள்ள கடற்கரைக்கு வந்து சோ்ந்தது. அங்கு அனைத்து விநாயகா் சிலைகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து விநாயகா் சிலைகள் உவரி கடலில் விசா்ஜனம் செய்யப்பட்டன.