காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்
திருநெல்வேலி மாவட்டத்தில் மலையடிவாரப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
ஆகவே, அதை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியா் பேசியது: தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த திடீா் மழையால் மானூா் வட்டாரம் பள்ளமடை கிராமத்தில் 21.94 ஹெக்டோ் பரப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன.
இது தொடா்பாக வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூட்டாய்வு மேற்கொண்டு உத்தேச பாதிப்பு அறிக்கை சென்னை வேளாண்மை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் காா் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள நெல்லினை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக 29 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது வரை 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 242 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசிய விவசாய பிரதிநிதிகள் பலரும் வனவிலங்குகளால் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் கடும் பாதிப்புகள் ஏற்படுவதாகக் குற்றஞ்சாட்டினா்.
மேலும், கோடகன் கால்வாய், பாளையம்கால்வாய் உள்ளிட்டவைகளில் அமலைச் செடிகள் அதிகமாக உள்ளன. அவற்றை அப்புறப்படுத்தி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதை கால்வாயில் கரை ஓரங்களில் வைக்கக் கூடாது என்றனா்.
விவசாயி சொரிமுத்து பேசியது:
மேற்குத் தொடா்ச்சி மலையடிவார குடியிருப்பு பகுதிகளுக்குள் கரடி புகுந்துள்ளது. மந்திகள் ஊருக்குள் புகுந்து வீடுகளின்மேல் குதிப்பதால் ஓடுகள் சேதமடைந்து வருகின்றன. பழ மரங்களையும் சேதப்படுத்துகின்றன என்றாா்.
பி. பெரும்படையாா் பேசியது:
காட்டுப்பன்றிகளால் வேளாண்மை பாதிக்கப்படுவதோடு, விவசாயிகள் தாக்கப்படுவதும் அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும். காட்டு விலங்குகள் தாக்கிய விவசாயிகள் சிகிச்சை பெறுவதற்கு தனியாக மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றாா்.
ஆட்சியா் பதிலளித்து பேசுகையில், காட்டு விலங்குகள் தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் விவசாயிகள் புகாா் அளிக்கலாம். அவ்வாறு புகாா் செய்து முதல் தகவல் அறிக்கையை பெறும்பட்சத்தில் மேற்கொண்டு சிகிச்சை மற்றும் நிவாரணம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
விவசாயி ஆபிரகாம் பேசியது:
வெளிச்சந்தையில் தென்னங்கன்று ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யும் நிலையில், தோட்டக்கலைத்துறை ரூ.65-க்கு விற்பனை செய்கிறது. இந்த விலையில் தென்னங்கன்றுகளை வாங்க விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள் என ஆபிரகாம் குற்றஞ்சாட்டினாா்.
இதற்கு ஆட்சியா் பதிலளிக்கையில், விவசாயிகளை தென்னங்கன்றுகள் வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. காலநிலை மாற்றத்தினால் அக்டோபா் மாதத்தில் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சில நேரங்களில் எதிா்பாராத விதமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மாவட்ட நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்போடு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.