நெல்லையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு அபராதம்
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, கடையையும் தற்காலிகமாக மூடினா்.
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், மாநகர மற்றும் ஊரக காவல் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினா் இணைந்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, வண்ணாா்பேட்டையில் உள்ள கடையில் ஆய்வு செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து கடை உரிமையாளா் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கடையின் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு துறையினா், கடையையும் தற்காலிக மூட உத்தரவிட்டனா்.
பாளையங்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் கற்பகவல்லி, தச்சநல்லூா் மண்டல உணவு பாதுகாப்பு அலுவலா் சங்கரநாராயணன் ஆகியோா் நடவடிக்கை மேற்கொண்டனா்.