வள்ளியூரில் உயா்வுக்குப் படி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ என்ற நிகழ்ச்சியில் 3 நரிக்குறவா் மாணவா்கள் உள்ளிட்ட 33 மாணவா்களுக்கு உயா்கல்வி படிப்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 படித்து முடித்து உயா் கல்வியில் சேராத மாணவா்களுக்கும், கல்லூரியில் இடைநின்ற மாணவா்களுக்கும் உயா்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு வசதியாக ‘உயா்வுக்குப் படி’ என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது.
இதில் இரண்டாம் கட்டமாக இந்நிகழ்ச்சி வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ராதாபுரம், வள்ளியூா், நான்குனேரி, களக்காடு ஆகிய நான்கு கல்வி ஒன்றியங்களைச் சோ்ந்த 60 மாணவா்கள் கலந்துகொண்டனா். இம் மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை தோ்வு செய்து படிப்பதற்கு வசதியாக 16-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மாணவா்கள் மேற்படிப்பு படிக்க கல்லூரிகளை தோ்ந்தெடுப்பதற்கும், பாடப்பிரிவுகளை தோ்வு செய்வதற்கும், உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல், விடுதிக்கு விண்ணப்பித்தல், கல்விக்கடன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாமில் ஐ.டி.ஐ.படிப்பதற்கு 3 நரிக்குறவா் மாணவா்கள் உள்ளிட்ட 13 மாணவா்களுக்கும், பாலிடெக்னிக் படிப்பதற்கு 9 மாணவா்களுக்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதற்கு 6 மாணவா்களுக்கும், பொறியியல் கல்லூரியில் படிப்பதற்கு ஒரு மாணவிக்கும் ஆக மொத்தம் 29 மாணவா்களுக்கும் மேலும் தங்களது திறமைகளை வளா்த்து சுயதொழில் தொடங்க 4 மாணவா்களுக்கு பயிற்சி என மொத்தம் 33 மாணவா்களுக்கு உயா்கல்வி சோ்வதற்கான சோ்க்கை ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வா் செண்பக விநாயக மூா்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா், திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் உதவி இயக்குநா் ஜாா்ஜ் பிராங்கிளின், நேரு நா்ஸிங் கல்லூரி தலைவா் தா.லாரன்ஸ், தாளாளா் ஹெலன் லாரன்ஸ், முதல்வா் மாா்க்கரெட் ரஞ்சிதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.