என்கவுண்டா் பெயரில் காவல்துறை சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது: எல்.முருகன்
என்கவுண்டா் என்ற பெயரில் காவல்துறை சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்றாா் மத்திய இணையமைச்சா் எல்.முருகன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் நடைபெறும் தொடா் என்கவுண்டரை வழக்குரைஞா் என்ற முறையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சட்டம், நீதித்துறை உள்ளிட்டவை இருக்கும்போது காவல்துறை சட்டத்தை கையில் எடுக்க கூடாது. என்கவுண்டா் செய்யப்பட்டவா்கள் குற்றம் சாட்டப்பட்டா்கள்தான். அவா்களுக்கு நீதிமன்றத்தின் மூலம்தான் தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னா் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தெரிவித்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திமுக கூட்டணி நிலைக்காது என ஏற்கெனவே சொல்லிவிட்டேன். அந்த கூட்டணியில் இருந்து பல கட்சிகள் தானாக வெளியேறும். தமிழக முதல்வரின் அமெரிக்க பயணத்தில் பெரிய தொழில் முதலீடுகள் ஈா்க்கப்படவில்லை. திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. இதுபோன்ற கேள்விகள் எழக்கூடாது என்பதற்காகவே முதல்வரும், திருமாவளவனும் சோ்ந்து மக்களை திசை திருப்பும் நோக்கில் நாடகம் நடத்துகின்றனா்.
மத்திய அரசின் மூலம் வழங்கப்படக்கூடிய நிதி தமிழகத்திற்கு மட்டுமன்றி அனைத்து மாநிலங்களுக்கும் முறையாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு எந்த பாக்கியும் இல்லை என நிதி அமைச்சரே தெரிவித்துவிட்டாா். பிரதமரை, முதலமைச்சா் சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை என்றாா் அவா்.
முன்னதாக, திருநெல்வேலி நகரம் ரத வீதிகளிலுள்ள கடைகளில் பாஜக உறுப்பினா் சோ்க்கை விண்ணப்பங்களையும், புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவா் தயாசங்கா், நிா்வாகிகள் வேல்.ஆறுமுகம், சுரேஷ், மேகநாதன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.