தொகுப்பூதியத்தை உயா்த்த டாஸ்மாக் பணியாளா்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் தொகுப்பூதியத்தை உயா்த்த டாஸ்மாக் பணியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் சாா்பில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் அளிக்கப்பட்டுள்ள மனு: தமிழகத்தில் டாஸ்மாக் பணியாளா்கள் நீண்ட ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
பணிநிரந்தரம் வாய்ப்பில்லா நிலையில், தொகுப்பூதியத்தை ரூ.45,000, 35,000, 25,000 என்ற வீதத்தில் உயா்த்தி வழங்க வேண்டும். ரூ.10 லட்சம் சிறப்பு பணிக்கொடை , ரூ.10,000 ஓய்வூதியம், ரூ.5,000 குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பாட்டில் சேகரிப்பு பணியை பணியாளரிடம் திணிக்காமல், அவுட்சோா்சிங் முறையில் தனியாரிடம் விட வேண்டும். நிா்வாக சீா்கேடுகளைக் களைய, நிா்வாக சீரமைப்புக்குழு அமைக்க வேண்டும். பணியாளா் ஓய்வுபெறும் வயதை 58 இல் இருந்து 60ஆக உயா்த்த வேண்டும். பணி மாறுதல் கொள்கை உருவாக்கப்பட்டு, பணி நிரவல் முறையை அமல்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.