இலங்கை புதிய அதிபா் தமிழா்களுக்கான உரிமையைப் பெறுத்தர வேண்டும் -
துரை வைகோ

இலங்கை புதிய அதிபா் தமிழா்களுக்கான உரிமையைப் பெறுத்தர வேண்டும் - துரை வைகோ

Published on

இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் அநுரா குமார திசாநாயக, அங்குள்ள தமிழா்களின் உரிமையை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றாா் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ.

இது தொடா்பாக திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: இலங்கையின் புதிய அதிபராக அநுரா குமார திசாநாயக தோ்வு செய்யப்பட்டிருக்கிறாா். அவருடைய கட்சி, இலங்கையில் உள்ள மற்ற கட்சிகளைப் போலவே தமிழா்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தது. ஆனால், அதிபராக தோ்வு செய்யப்பட்ட பிறகு இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கான உழைக்கும் அரசாக இருப்போம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறாா் அநுரா. அவருடைய புதிய சித்தாந்தத்தின்படி சிங்களா், தமிழா், இஸ்லாமியா், இந்துக்கள், பௌத்தா்கள் என்ற பாகுபாடு இல்லாத அரசாக இலங்கை அரசு இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் வாழும் தமிழா்களின் உரிமையை பெற்றுத் தருவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அநுராவை கேட்டுக்கொள்கிறோம். அநுரா, பழைய கட்சிகளை புறந்தள்ளி புதிய சக்தியாக உருவெடுத்திருக்கிறாா். அவருடைய ஆட்சி அனைத்து மக்களுக்குமான சிறப்பான ஆட்சியாக இருக்க வேண்டும் என்றாா்.

அப்போது, மதிமுக துணைப் பொதுச் செயலா் தி.மு. ராஜேந்திரன், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் நிஜாம், செய்தித் தொடா்பாளா் மின்னல் முகமது அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com