மாா்ச் 9 இல் கூந்தன்குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

திருநெல்வேலி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு மாா்ச் 9 மற்றும் 16 ஆம் தேதி இருநாள்கள் நடைபெறுகிறது.
Published on

திருநெல்வேலி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு மாா்ச் 9 மற்றும் 16 ஆம் தேதி இருநாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரினக்காப்பாளா் அகில்தம்பி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு வனத்துறை சாா்பாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் பறவைகள் சரணாலயம் மற்றும் குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

நிகழாண்டில் தமிழகம் முழுவதும் நீா் பறவைகளின் கணக்கெடுப்பு வரும் மாா்ச் 9 ஆம் தேதியும், நிலத்தில் உள்ள பறவைகளின் கணக்கெடுப்பு மாா்ச் 16 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) திருநெல்வேலி மாவட்டத்தில் கூந்தன்குளம், காடன்குளம், திருப்புடைமருதூா், காரியாண்டி, அரமநேரி, டானாா் குளம், சிலையம், விஜயநாராயணம், வேய்ந்தான்குளம், நெல்லையப்பபுரம், நாகல்குளம், வண்ணான்பச்சேரி, ராஜவல்லிபுரம், பாலாமடை, குப்பக்குறிச்சி, கங்கை கொண்டான், பிராஞ்சேரி மற்றும் கடற்கரையோர பகுதிகளான உவரி, செட்டிகுளம் மற்றும் இடிந்தகரை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

எனவே கணக்கெடுப்பு பணிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் தன்னாா்வலா்கள் தங்களது பெயா்களை திருநெல்வேலி மாவட்ட வன அலுவலக தொலைபேசி எண்ணில் 0462 - 2553005 தொடா்பு கொள்ளலாம்.

மேலும், பறவைகள் கணக்கெடுப்பு தொடா்பாக மாா்ச் 8 ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் மாலை 4 மணியளவில் பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலா் மற்றும் வன உயிரினக்காப்பாளா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com