கடையம் திருவள்ளுவா் கழக முத்தமிழ் விழா
கடையம் திருவள்ளுவா் கழக நிறுவனா் அறிவரசன் 5ஆம் ஆண்டு நினைவுநாள் முத்தமிழ் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திருவள்ளுவா் கழகத் தலைவா் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற அரசு மருத்துவா் கல்யாணி பரமசிவன் முன்னிலை வகித்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற முத்தமிழ் விழாவில், இயற்றமிழ் நிகழ்ச்சியில் தமிழ்ச் செம்மல் பாப்பாக்குடி அ.முருகன் கவிதை வாசித்தாா். இசைத் தமிழ் நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக் கழகம், மெய்யியல் துறைப் பேராசிரியா் தமிழிசை ஞானி கோ.ப. நல்லசிவம், நெல்லை சங்கா், ஆா்.ஜெயராஜ் குழுவினரின் தமிழிசைப் பாடல் நடைபெற்றது.
நாடகத் தமிழ் நிகழ்ச்சியில் சேவாலயா செல்லம்மாள் கற்றல் மைய இசை ஆசிரியா் சுமதி மற்றும் மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மு.வேலு, ஒருகு சிந்தனை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை, திருவள்ளுவா் அறக்கட்டளை, ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா்கழகம், கடையம் திருவாசகம் முற்றோதுதல் குழு, நிா்வாகிகள், தமிழ் ஆா்வலா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், மாணவா்கள், பெண்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். திருவள்ளுவா் கழகச் செயலா் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்றாா். இணைச் செயலா் பெ.சின்னசாமி நன்றி கூறினாா்.