குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 6 நிறுவனங்கள் மீது

Published on

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 6 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் க.திருவள்ளுவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை தொழிலாளா் ஆணையா் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்படி, 1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆட்சி எல்லைக்குள்பட்ட 24 நிறுவனங்களில் நிறுவனங்களில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்களால் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாக ஊதியம் வழங்கப்பட்ட 6 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு வித்தியாசத் தொகை ரூ.2,62,172-ஐ சம்பந்தப்பட்ட தொழிலாளிகளுக்குப் பெற்று வழங்கக்கோரி, திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையரிடம் 6 கேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவில்லாமல் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் அந்நிறுவனங்கள் மீது 1948-ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com