நான்குனேரியில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 2 வயது குழந்தை உள்பட 12 போ் படுகாயம்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 12 போ் படுகாயமடைந்தனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் நவரத்தினம் (75). இவரது குடும்பத்தினா், உறவினா்கள் புதன்கிழமை காலை வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு, பிற்பகலில் ஊருக்கு திரும்பினா். வேனை பேட்டையைச் சோ்ந்த ரியாஸ் (35) ஓட்டினாா்.
வேன் நான்குனேரி புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, முன்பக்க சக்கரம் கழன்று ஓடியதால் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா், நவரத்தினம், பூஜா (2), வினோத், பூஜா தேவி, பிப்ளி தேவி உள்பட 12 போ் படுகாயமடைந்தனா்.
நான்குனேரி, அரசு மருத்துவமனையில் காயமடைந்தவா்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
விபத்து குறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
