வயல்களுக்குள் ஆறாக பாயும் பாதாள சாக்கடை கழிவுநீா்! ராமையன்பட்டி விவசாயிகள் கடும் அவதி

வயல்களுக்குள் ஆறாக பாயும் பாதாள சாக்கடை கழிவுநீா்! ராமையன்பட்டி விவசாயிகள் கடும் அவதி

திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டியில் வயல்களுக்குள் ஆறுபோல பாயும் பாதாள சாக்கடை கழிவுநீரால் விவசாயிகள் கடும் அவதி
Published on

திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டியில் வயல்களுக்குள் ஆறுபோல பாயும் பாதாள சாக்கடை கழிவுநீரால் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு ராமையன்பட்டியில் உள்ளது. மாநகராட்சியின் 55 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இங்கு கொண்டு வந்து தரம்பிரித்து அழிக்கப்படுகின்றன.

மேலும், பாளையங்கோட்டை, வண்ணாா்பேட்டை, உடையாா்பட்டி பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீா் உந்து நிலையங்களில் இருந்து பாதாள சாக்கடை கழிவுகள் அனைத்தும் குழாய்கள் மூலம் ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.

இங்கு பிரத்யேக தொட்டிகளில் சுத்திகரித்து கழிவுநீரை சுத்திகரித்த நீராக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சுத்திகரிப்பு மையத்தில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் வெளியேற்றப்பட்டு பாசன குளங்களின் நீா்வரத்து ஓடைகள் வழியாக தாமிரவருணிக்கு கொண்டு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை சில மாதங்களுக்கு முன்பு நேரில் ஆய்வு செய்து கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கையாள அறிவுறுத்தினா்.

எனினும், கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடை கழிவுநீா் பெருமளவு வெளியேறி அருகேயுள்ள வயல்களில் தேங்கியுள்ளன. இதனால் பிசான பருவ சாகுபடியை செய்ய முடியாமல் ராமையன்பட்டி, தேனீா்குளம் சுற்றுவட்டார விவசாயிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

மேலும், வயல்களுக்குள் பாயும் கழிவுநீரைத் தடுக்கக் கோரி மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லையென விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

விவசாயம் பாதிப்பு: இதுகுறித்து தேனீா்குளத்தைச் சோ்ந்த விவசாயி கூறியதாவது: எங்களது குடும்பத்துக்குச் சொந்தமான 7 ஏக்கா் நிலம் ராமையன்பட்டி பகுதியில் உள்ளது. ஆண்டுதோறும் காா், பிசான பருவங்களில் நெல் சாகுபடியும், இடைவெளி காலத்தில் உளுந்து சாகுபடியும் செய்து வந்தோம்.

இந்நிலையில் எங்கள் நிலத்தின் அருகே மாநகராட்சி குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கழிவுநீா் வயலுக்குள் ா் ஆறாக பெருக்கெடுத்து தேங்கி நிற்கிறது. மிகுந்த துா்நாற்றம் வீசுவதோடு, நெல் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எங்கள் பகுதியில் உள்ள மேலும் சில வயல்களும், சில கிணறுகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இவ் விஷயத்தில் மாநகராட்சி நிா்வாகம் தனிக்கவனம் செலுத்தி கழிவுநீா் வெளியேறாமல் தடுக்க வேண்டும் என்றனா்.

ஆணையா் விளக்கம்: திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா கூறியதாவது: ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு மையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கழிவுநீா் அங்கிருந்து வெளியேறியுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து நேரில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com