சேரன்மகாதேவியில் நீதிபதியை நோக்கி காலணி வீச்சு: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது நீதிபதியை நோக்கி காலணி வீசிய வெளிமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர சிங் (29). இவா் மீது, சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே பூதத்தான்குடியிருப்பில் உள்ள கோயிலில் உண்டியல் காணிக்கையைத் திருடியதாக சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவரை, நீதிமன்ற விசாரணைக்காக சேரன்மகாதேவி நீதிமன்றத்துக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனா்.
பிற்பகல் 1 மணியளவில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண்சங்கா், வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டதாகத் தெரிகிறது. அப்போது, நீதிபதியை நோக்கி தா்மேந்திரசிங், தான் அணிந்திருந்த காலணியை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றாா்.
அவரை நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த வழக்குரைஞா்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து நீதிமன்ற ஊழியா் அளித்த புகாரின் பேரில், சேரன்மகாதேவி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தா்மேந்திர சிங்கை கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.
