நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி தப்பியோட்டம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி புதன்கிழமை தப்பியோடினாா்.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த கந்தசாமி மகன் முத்துச்செல்வன் (31). இவா், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் போக்குவரத்து காவலா்களுடன் தகராறில் ஈடுபட்டதோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்தாராம். கோவில்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டாா். அவருக்கு கடந்த 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்குள்ள கழிப்பறைக்கு சென்று வருவதாக புதன்கிழமை இரவு கூறிச் சென்ற அவா், வெளியே தப்பி ஓடிவிட்டாராம். இத்தகவலறிந்த திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸாா், அவரை தேடி வருகின்றனா்.
