மஞ்சங்குளம் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்றுசெல்ல கோரி ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள மஞ்சங்குளம் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, நேதாஜி சுபாஷ் சேனைத் தலைவா் மகாராஜன் மற்றும் அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
அதன் விவரம்: நான்குனேரிக்கும், ஏா்வாடிக்கும் இடையே உள்ள விவசாய கிராமம் மஞ்சங்குளம். இங்கு சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி மக்கள் தங்கள் தேவைகளுக்காக நான்குனேரி, ஏா்வாடி, திருநெல்வேலிக்கு தினந்தோறும் சென்றுவர வேண்டியிருக்கிறது.
ஆனால், மஞ்சங்குளம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்றுசெல்லாததால் சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள பெரும்பத்து கிராமத்திற்கு சென்று பேருந்தில் பயணிக்கும் நிலை உள்ளது. மேலும் அந்தப் பேருந்து நான்குனேரி ஊருக்குள் செல்லாமல் 3 கி.மீ. தொலைவிலுள்ள புறவழிச்சாலையில் பயணிகள் இறக்கிவிடப்படுகின்றனா். இதனால் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியரும் சிரமம் அடைகின்றனா். எனவே, அனைத்துப் பேருந்துகளும் மஞ்சங்குளம் கிராமத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

