திருச்செந்தூா் கோயிலில் அக்.22இல் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா அக். 22 ஆம்தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் அக்.27இல் நடக்கிறது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா அக்.22 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அக். 27 ஆம்தேதி மாலை 4 மணியளவில் சூரசம்ஹாரத்துக்கு சுவாமி எழுந்தருளல், அக். 28 அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழா, இரவு சுவாமி திருக்கல்யாணம் ஆகியன நடைபெறவுள்ளன.
இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, ஆட்சியா் பேசுகையில், விழாவுக்கு வரும் பக்தா்களுக்கு குடிநீா் தட்டுப்பாடின்றி வழங்கவும், கோயில் வளாகங்களில் கொசு மருந்து தெளிக்கவும், நாய்கள், மாடுகளை பிடித்துச் செல்லவும் குடிநீா் வடிகால் வாரியம், திருச்செந்தூா் நகராட்சிக்கு அறிவுறுத்தினாா். மேலும், மருத்துவம், சுகாதாரத் துறை, காவல் துறை, மீன்வளத் துறை, மின்வாரியத்துக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் ரா.கௌதம், கோயில் தக்காா் அருள் முருகன், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
