பாபநாசம் பிரதான சாலையில் கரடி நடமாட்டம்

Published on

பாபநாசத்தில் பிரதான சாலையில் கரடி நடமாடியதைப் பாா்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், அம்பாசமுத்திரம், பாபநாசம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு பாபநாசம் கோயிலுக்குப் பின்புறம் வடக்குக் கோடை மேலழகியான் கால்வாய் பாலத்தின் அருகில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தபோது, புதருக்குள் இருந்து வெளியே வந்த கரடி சாலையைக் கடந்து சென்றுள்ளது. இதனால், அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டவா்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனா்.

வனப்பகுதியிலிருந்து வெளியேறிய கரடிகள் கூட்டமாக புதா்கள், பொத்தைகளில் மறைந்திருந்து இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வருவதால் கரடிகளைக் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com